மேட்டூர் அணை திறக்கும் முன் தூர்வாரும் பணி : முதல்வர் கருணாநிதி உறுதி

>> Tuesday, December 22, 2009



சென்னை : ""வரும் ஆண்டில் பொதுப்பணித் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் இணைந்து, மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பே, தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும்,'' என மேட்டூர் அணையின் பவள விழா நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி பேசினார்.


மேட்டூர் அணை கட்டப்பட்டு, 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் பவள விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் கருணாநிதி வாழ்த்திப் பேசினார். மேலும், பவள விழா கோபுரம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டவும் செய்தார்.


அப்போது முதல்வர் பேசியதாவது: ஆங்கிலேய ஆட்சி, காவிரியில் அணை கட்டுவதற்குரிய இடத்தை ஆய்வு செய்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்க நாயக்கர் குறிப்பிட்ட இடமான மேட்டூரை தேர்வு செய்தது. கர்னல் எல்லிஸ் என்ற புகழ்பெற்ற ராணுவப் பொறியாளர், 1910ம் ஆண்டில் அணையை வடிவமைத்து, உரிய மதிப்பீடுகளோடு ஆங்கிலேய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார்.அதே காலகட்டத்தில், அன்றைய மைசூரு சமஸ்தானமும், பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா உதவியுடன் காவிரியில் மைசூரு அருகே கிருஷ்ணராஜசாகர் நீர்த் தேக்கத்தை அமைக்க, ஆங்கில அரசிடம் அனுமதி கோரியது.எனவே, காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக அப்போதே பிரச்னைகள் எழுந்து, பல்வேறு முயற்சிகளுக்குப் பின் 1924ம் ஆண்டில் சென்னை மாகாண அரசுக்கும், மைசூரு அரசுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. 1924ம் ஆண்டு தான் காவிரிப் பிரச்னை ஆரம்பமானது.


அதே ஆண்டு தான் நானும் பிறந்தேன்.பிறந்தது முதல் இதுவரை அந்தப் பிரச்னைக்காகத் தான் வாதாடிக் கொண்டிருக்கிறேன்; போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த உடன்படிக்கைக்குப் பின், காவிரியில், மேட்டூர் அணையை கட்ட ஆறு கோடியே 12 லட்சம் ரூபாயை அனுமதித்து, 1925ல் இங்கிலாந்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்தன.பொறியாளர் சர்.கிளமென்ட் முல்லிங்ஸ் தலைமையில் தமிழக பொறியாளர்கள், தொழிலாளர்கள், குறிப்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல் தச்சுத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடி, மேட்டூர் அணையின் கட்டுமான வேலைகளை 1925 ஜூலை 20ம் தேதி துவங்கி, 1934ம் ஆண்டு ஜூலையில் முடித்தனர்.


ஒன்பது ஆண்டுகளில், 120 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கும் வகையில், 5,300 அடி நீளமும், 171 அடி அகலமும் உடையதாக கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணையில் இருந்து 1934 ஜூன் 12 அன்று முதன் முதலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்தில் உழவுத் தொழிலுக்கு அச்சாணி காவிரி தான். காவிரிக்கு பெருமை சேர்ப்பது மேட்டூர் அணை. இந்த அணைக்கு 75 வயது முடிந்து, பவள விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட போது, இது ஆசியாவிலேயே பெரிய நீர்த்தேக்கம், இன்று தமிழகத்தின் தலையாய நீர்த்தேக்கம்.இந்த அணைக்குக் கீழே வெள்ளக் காலங்களில் கிடைக்கும் கூடுதல் நீரைத் தடுத்து நிறுத்த, கரிகால் சோழன் கட்டிய கல்லணையைத் தவிர வேறு அணை ஏதும் இல்லாத குறையைப் போக்கக் கருதிய இந்த அரசு, கரூர் மாவட்டம் மாயனூர் அருகே கதவணை அமைக்க இந்த ஆண்டு பிப்ரவரியில் 189 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, அதற்குரிய பணிகளை நிறைவேற்றி வருகிறது.


இந்த கதவணை மூலம் தேக்கப்படும் வெள்ள நீர், வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடப்படும். மேலும், காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைச் செப்பனிட மத்திய அரசு 375 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மாநில அரசின் பங்காக 93 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தர ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.காவிரிப் பாசன விவசாயிகள் பயன்பெற, தி.மு.க., அரசு அமையும் போதெல்லாம் காவிரியாற்றிலும், கிளை ஆறுகளிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


வரும் ஆண்டில், சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடன் ஆலோசித்து, பொதுப்பணித் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் இணைந்து, மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே, தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி முடிக்க வேண்டுமென, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, தொன்மை வாய்ந்த காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் அமைந்துள்ள மதகுகள், அணைகள், கதவணைகள் ஆகியவற்றை சீரமைக்கவும், கரைகளைப் பலப்படுத்தவும், வெள்ளக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் உதவும் வகையில், தமிழக அரசு 5,100 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு பெருந்திட்டத்தை தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.


இந்நிலையில், மேட்டூர் அணையின் பவளவிழா நினைவாக இதன் வலது கரையில் உள்ள குன்றின் மேல் 75 அடி உயரத்தில், பவள விழா கோபுரத் தூண் அமைத்து, மேட்டூருக்குச் சுற்றுலா வரும் பயணிகள் அதன் மேல் ஏறி நின்று மேட்டூர் அணையையும், இயற்கை காட்சிகளையும், மேட்டூர் நகரையும் கண்டு மகிழ வகை செய்யும் திட்டத்தை நிறைவேற்ற, இந்த அரசு ஒரு கோடி ரூபாயை அனுமதித்துள்ளதுடன், அதற்காக இன்று (நேற்று) அடிக்கல் நாட்டியுள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.

Read more...

பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள்

நாடு முழுவதும் சுமார் 52 விழுக்காடு குழந்தைகள் பாலியல்ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
குறிப்பாக டெல்லி, அஸ்ஸாம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் அதிகளவு துன்புறுத்தல்கள் நடப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதில் சுமார் 21 விழுக்காடு குழந்தைகள் மிக அதிகளவாகவும், 50 விழுக்காட்டினர் லேசான அளவாகவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வினை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Read more...

பாம்பு கடித்து மாணவர் பலி:



மதுரை மாவட்டம் வயலூரை சேர்ந்தவர் முத்தன் மகன் ரமேஷ். இவர் மதுரை பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்த இவரை கடந்த 19-ந்தேதி பாம்பு கடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட ரமேஷ் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு மாணவர் ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார். சரியான சிகிச்சை அளிக்காததால் தான் மாணவர் இறந்து விட்டார் என்று கூறி கல்லூரி மாணவர்கள் ரமேசின் உடலை ஆஸ்பத்திரி முன்பாக ரோட்டில் போட்டு மறியல் செய்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் தேன்மொழி மற்றும் அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இன்று காலை இறந்த மாணவர் ரமேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அந்த அறை முன்பு கல்லூரி மாணவர்கள், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். பாம்பு கடித்த மாணவருக்கு சரியான சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், மாணவர் ரமேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி மாணவர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு மறியல் செய்ய முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

தொடர்ந்து மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு மீண்டும் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் தேன்மொழி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்தனர். உடனே போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த சம்பவம் தொடர் பாக 12 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ஒரு சில மாணவர்கள் அந்த வழி யாக வந்த பஸ்கள் மீது சரமாரியாக கற்களை வீசினர். தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமான போலீசார் ஆஸ்பத்திரி முன்பு குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் எல்லாளன் தலைமையில் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

கோபன்ஹேகன் மாநாடு குறித்து சில நாடுகள் மீது பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது


கோபன்ஹேகன் காலநிலை மாநாடு சில நாடுகளின் சிறிய குழு ஒன்றால் பணையம் வைத்து நெருக்கடிக்கு தள்ளப்பட்டுவிட்டது என்று பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் கூறியுள்ளார்.

கோபன்ஹேகனில் முக்கிய உடன்பாடு ஏற்படுவதை சீனா தடுத்துவிட்டது என்று அவரது அமைச்சர்களின் ஒருவரான எட் மிலிபாண்ட் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தனது பங்குக்கு சீனா, புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை வெளியேற்றுவதை அதிகரிக்கச் செய்ய அனுமதித்ததாக அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகளை குற்றஞ்சாட்டியுள்ளது.

நடைமுறைகள் குறித்த விவகாரங்களில் அதிக நேரம் வீணடிக்கப்பட்டதாக கூறுகிறார், இந்த மாநாட்டின் அதிகமான அமர்வுகளுக்கு தலைமை தாங்கிய டென்மார்க் நாட்டின் முன்னாள் காலநிலை அமைச்சரான கொன்னி கெடகார்ட்.

வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் எந்தவொரு நாடும் சரியான கரிசனை காட்டவில்லை என்று தான் ஏமாற்றமடைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

Read more...

கடன் பிரச்சினை தொடர்பில் துபாய் வேர்லட் நிறுவனம் பேச்சுவார்த்தை


துபாய் அரசாங்கத்துக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனமான துபாய் வேர்ல்ட் நிறுவனம், தனது 20 பில்லியன் டாலர்கள் பெறுமதியான கடனை மாற்றியமைப்பது குறித்து தனக்கு கடன் வழங்கியவர்களுடன் பேச்சு நடத்துகின்றது.

தனது நிதி நிலைமை குறித்து துபாய் வேர்ல்ட் தனது வங்கிகளுக்கு விபரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தப் பிராந்திய பங்குச் சந்தைகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வாக கருதப்படுகின்ற, தனது கடனைத் திருப்பித்தருவதற்கு தாமதமாகும் என்று துபாய் வேர்ல்ட் அறிவித்த நிகழ்வுக்குப் பின்னர் நடக்கின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்

Read more...

"பாகிஸ்தானின் அதிபர் சில அதிகாரங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்":எதிர்கட்சிகள் கோரிக்கை


பாகிஸ்தானில் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி தனது அதிகாரங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்காவிட்டால் அங்கு அவர் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று முக்கிய எதிர்கட்சி எச்சரித்துள்ளது.

அரசியல் ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பில் அவருக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

ஆனாலும் சட்டவிரோதமான வகையில் ஜர்தாரி அவர்களையோ அல்லது அவரது அரசையோ பதவியிலிருந்து அகற்றும் எந்த நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம், ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு பொது மன்னிப்பபு வழங்கும் ஒரு ஆணையை சட்டவிரோதமானது என்று அறிவித்தது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அடங்குவர். இதையடுத்து அங்கு அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

Read more...

இரானில் அயதுல்லாவின் உடலடக்கத்தின் போது மோதல்கள்







இரானில் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த மூத்த மதகுருக்களில் ஒருவரான கிராண்ட் அயதுல்லா ஹொஸைன் மொண்டசாரியின் இறுதி நிகழ்வுகளில், நாட்டின் பாதுகாப்பு படையினருக்கும் எதிர்கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


புனித நகரமான குவாமில் இடம் பெற்ற அவரது நல்லடகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு முக்கிய எதிர்கட்சித் தலைவர்களான மிர் ஹொஸைன் முசவியும், மெஹ்டி கரூபியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவரது நல்லடக்கத்தின் போது, அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த்வர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மொண்டசாரியின் இறுதி நிகழ்வுகளின் போது பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்வானது எதிகட்சியினரின் போராட்டங்களுக்கு ஒரு உந்துதலை அளித்துள்ளது என்றும், இந்த வாரத்தில் அது மேலும் பரவலாம் என்றும் டெஹ்ரானில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP