அமெரிக்கத் தாக்குதலில் 11 பேர் பலி

>> Thursday, January 7, 2010


அமெரிக்க விமானத்தில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

வடக்கு வசரிஸ்தானில் உள்ள முக்கிய நகரான மிரான்ஷாவுக்கு மேற்கே முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த இடம் தாலிபான்களின் பயிற்சி முகாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

முதல் ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை மக்கள் மீட்க முற்பட்டபோது இரண்டாவது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Read more...

காசா எல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எகிப்திய காவலர் மோதல



காசா எல்லையில் ஆர்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் எகிப்திய எல்லைக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

காசாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான எல்லைப் பகுதிக்கு கீழே சுரங்கப் பாதை தோண்டி அதன் வழியாக காசாவுக்கு பொருட்களை கடத்துவதை தடுக்கும் வகையில் ஒரு சுரங்க கட்டமைப்பை எகிப்து அமைத்து வருவதை எதிர்த்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

காசா நிர்வாகத்தை நடத்தும் ஹமாசால் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பாலத்தீன இளைஞர்கள் எகிப்திய எல்லைக் காவலர்கள் மீது கற்களை வீசித் தாக்கினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ஹமாஸ் பாதுகாப்பு படையினர் முற்பட்டனர். இரு தரப்பிலும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்

Read more...

கார்டன் பிரவுண் குறித்து கட்சிமட்ட வாக்கெடுப்புக்கு கோரிக்கை


பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் அவர்கள் தொடர்ந்தும் தொழிற்கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்பது குறித்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒரு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

இராணுவத் துறையின் முன்னாள் அமைச்சரான ஜெஃப் ஹூன் மற்றும் சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சரான பெட்ரீஷியா ஹீவிட் ஆகியோர், கார்டன் பிரவுண் அவர்களின் தலைமை குறித்து கட்சியில் தீவிர பிளவுகள் இருப்பதாகவும், அப்பிரச்சினைக்கு இறுதியான ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

ஜூன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தொழிற்கட்சியினர் மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் பின் தங்கியுள்ளனர்.

எனினும் கட்சியுடன் பாரம்பரியமாக நெருங்கிய தொடர்புகளை உடைய தொழிற்சங்கங்களும், பிரதமருக்கு ஆதரவானர்களும் இந்தப் பிரேரணையை கண்டித்துள்ளனர். இது ஒரு திசை திருப்பும் நடவடிக்கை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Read more...

த‌மிழக‌த்‌தி‌ல் 40,399 போ‌லியோ சொ‌ட்டு மரு‌ந்து மைய‌ங்க‌ள

தமி‌ழ்நாட்டில் 40,399 சிறப்பு மையங்கள் மூலம் போ‌லியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன. எனவே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளு‌க்கு சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு பெ‌ற்றோ‌ர்களை த‌மிழக அரசு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது.

போலியோவை நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிப்பதற்காக வரும் 10.1.2010 மற்றும் 7.2.2010 ஞாயிற்றுக் கிழமைகளில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நாடு முமுவதும் நடத்தப்பட உள்ளன. தமி‌ழ்நாட்டிலும் முகாம்கள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செ‌ய்யப்பட்டுள்ளன. 5 வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் மேற்கண்ட முகாம் நாட்களின் போது போலியோ சொட்டுமருந்து கூடுதலாக வழங்கப்படும்.

பல்ஸ் போலியோ முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம், தமி‌ழ்நாட்டில் தொடர்ந்து ஆறாம் ஆண்டாக போலியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில், இப்போதும் போலியோவினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த மாநிலங்களிலிருந்து தமி‌ழ்நாட்டுக்கும் போலியோ நோ‌ய்க் கிருமிகள் பரவ வா‌ய்ப்பு உள்ளதால், இந்த ஆண்டும் போலியோ சிறப்பு முகாம்களை வெற்றிகரமாக நடத்த நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.

முகாம் நாட்களில் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டியதன் அவசியம்:

போலியோவை உண்டாக்கும் வைரஸ் நுண் கிருமிகள் குழந்தைகளை பாதிக்கச் செ‌ய்வதோடு, அவர்களின் கை, கால்கள் மற்றும் உடம்பின் சில பகுதிகளை நிரந்தரமாக ஊனமடையச் செ‌ய்கின்றன. போலியோ நுண் கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.

இந்நோ‌ய் வருமுன் காப்பதே மேலாகும். அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் நடத்தப்படும் பல்ஸ் போலியோ முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பதுதான். பாதுகாப்பான தடுப்பு மருந்து கொடுக்கப்படும் போது, நோ‌ய் பாதிப்பை உண்டாக்கும் கொடிய நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

வழக்கமாக கொடுக்கும் தடுப்புமருந்தின் மூலம் போலியோ நோ‌ய் பரவாமல் தடுக்கப்பட்டாலும், ஒரே சமயத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நுண்கிருமிகள் பரவாமல் சுற்று சூழலிலிருந்து அறவே ஒழிக்க முடியும். ஆகவே ஒரு குழந்தை கூட விடுபடாமல் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து கொடுக்கப்படவேண்டும்.

வெளிமாநிலத்தவர் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து:

கட்டுமானப் பணிகள், மேம்பாலம் மற்றும் இரயில்வே இருப்புப்பாதை சீரமைப்புப் பணிகளில் வெளி மாநிலத்தவர் ஏராளமானோர் தமி‌ழ்நாட்டில் வேலை பார்க்கின்றனர். பிற மாநிலங்களில் போலியோ நோ‌ய்க் கிருமிகள் தற்போது இருந்து வருவதால் அங்கிருந்து வந்து போகும் மக்கள் மூலம் தமி‌ழ்நாட்டு குழந்தைகளுக்கு போலியோ நோ‌ய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே இத்தகைய இடம் பெயர்ந்தோர் குழந்தைகளை தமி‌ழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு செ‌ய்து, அவர்களுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செ‌ய்யப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

1. அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 10.1.2010 (ஞாயிற்றுக்கிழமை) முதல் சுற்றின்போது ஒரு தவணை சொட்டு மருந்தும் மீண்டும் (7.2.2010) ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் சுற்றின்போது இன்னொரு தவணையும் கொடுக்கப்பட வேண்டும்.

2. போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது. எத்தனை முறை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

3. ஓரிரு நாட்களுக்கு முன்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் கொடுக்கவேண்டும்.

4. முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்து வழக்கமான நடைமுறை தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்திற்கு மாற்று அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.

5. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

தமி‌ழ்நாட்டில் 40,399 சிறப்பு மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன. சொட்டுமருந்து வழங்கும் சிறப்பு மையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள் மற்றும் முக்கியமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பேருந்து நிலையம், இரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவர்களும் தங்களது மருத்துவ மனைகளில் முகாம் நாட்களின் போது இலவசமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செ‌ய்யப்பட்டுள்ளது.

சுமார் 70 லட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். இப்பணியைச் சிறப்பாகச் செ‌ய்ய பல்வேறு அரசுத் துறைகள், ரோட்டரி சங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள்.

சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள “மை” வைக்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து, அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களின் நலன் கருதி சொட்டு மருந்து முகாம்கள் தமி‌ழ்நாடு முழுவதும் அவரவர் வசிப்பிட பகுதிகளுக்கு அருகாமையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெற்றோர்கள் அனைவரும் 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளை போலியோ முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். “சொட்டு மருந்து கொடுப்போம்; போலியோவை ஒழிப்போம்; குழந்தை நலம் காப்போம்” எ‌ன்று ம‌க்க‌ள் ந‌ல்வா‌ழ்‌வு‌த்துறை அமை‌ச்ச‌ர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Read more...

இந்தியாவுடன் 1000 ஆண்டு யுத்தத்திற்கு தயார்: சர்தாரி

காஷ்மீர் பிரச்னைக்காக இந்தியாவுடன் 1000 ஆண்டுகள் கொள்கை யுத்தம் நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.

ஆஸாத் ஜம்மு காஷ்மீர் சட்டசபை மற்றும் காஷ்மீர் கவுன்சிலின் கூட்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், இது (காஷ்மீர் பிரச்னை) ஒரு கொள்கை யுத்தம் என்றும், தலைமுறைத் தலைமுறையாக இது நீடிக்கும் என்றும் கூறினார். 


காஷ்மீர் பிரச்னையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் ஜனநாயக அரசுகள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிராந்திய அமைதிக்கும், நீண்ட காலமாக இருந்துவரும் காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறிய சர்தாரி, காஷ்மீருக்கான அமைதியிலிருந்து பிராந்திய அமைதியை பிரித்துவிட முடியாது என்றார்.

இந்த எண்ணத்தை உலக நாடுகளிடையே பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும், தொடர்ந்து அதனை முன்னெடுத்து செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார்.

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக சர்வதேச சமூகம் ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கான நேரம் விரைவிலேயே வரும் என்றும், அமைதியாக வாழ்வதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சர்தாரி மேலும் தெரிவித்தார்.

Read more...

ஜோதிபாசுவிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மன்மோகன் சிங்

நிமோனியா காய்ச்சலாம் அவதிப்பட்டு வரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவை பிரதமர் மன்மோகன் சிங் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மூச்சுத்திணறல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு கடந்த ஜனவரி 1ஆம் தேதி கொல்கட்டாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தததால் உயிர் காக்கும் உபகரணங்களின் பொறுப்பில் ஜோதிபாசு வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் ஒரு மணியளவில் கொல்கட்டா வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் புத்ததேவ் வரவேற்றார். அங்கிருந்து நேரடியாக சால்ட் லேக் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜோதிபாசுவை சந்தித்தார்.

சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்து ஜோதிபாசுவிடம் நலம் விசாரித்த பிரதமர், பின்னர் உடனடியாக கொல்கட்டா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமருடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வந்திருந்தார்.

Read more...

பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை மரணம


கொழும்பில் தனி இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தை ‌திருவேங்க‌டம் வேலுப்பிள்ளை (86), இன்று காலை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே இறந்ததாகவும் இலங்கை இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த வேலுப்பிள்ளைக்கு, எந்த வகையான மருத்துவ உதவிககள் அளிக்கப்பட்டது என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக அவர் இறந்தார் என்பது பற்றியோ இராணுவத் தரப்பு கூற மறுத்துள்ளது.

அவரது உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்தும் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை.

வேலுப்பிள்ளை தடுத்து வைக்கப்பட்ட அதே இடத்திலேயே பிரபாகரனின் தாயாரும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் கிடைக்கிறது அல்லது மருத்துவ உதவிகள் சரிவரக் கிடைக்கின்றனவா என்பதே மிகுந்த சந்தேகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP