இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானதாக கருதப்படும் தினத்தின் 70 ஆண்டுகளை குறிக்கும் வகையில், போலந்தில் வைபவங்கள் நடக்கின்றன. உலகமெங்கும் பரந்துபட்டு நடந்த அந்தப் போர் உலகிலேயே மனித குலம் இதுவரை சந்தித்த மிகப்பெரிய அழிவுக்கு காரணமாகியது.
அது ஒரு முழுப் போர்- ஒட்டுமொத்தமாக, முன்னெப்போதும் இல்லாதபடி , அனைத்து உலகத்தையும் அது ஆக்கிரமித்தது. அதில் பங்கேற்ற முக்கியமான தரப்பினர், தமது தொழில்துறை, பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான முயற்சிகள் அனைத்தையும் மோதலுக்காக அர்ப்பணித்தனர்.
உலெகெங்கும் இருந்து பத்துக்கோடி படைச் சிப்பாய்கள் இந்தப் போரில் சண்டையிட்டனர். 5 முதல் 7 கோடிப்பேர் அதில் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் உலகப்ப் போர் காலகட்ட சோவியத் சுவர்ரொட்டி ஒன்று
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். அதிலும் அதிகத் தொகையினர் இறந்தது சோவியத் ஒன்றியத்தில். தொற்று நோய்களும், பட்டினியும் பலரைப் பலிகொண்டுவிட்டன.
ஜேர்மனிக்கு எதிரான பிரிட்டனின் போர் அறிவிப்பு, பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் அனைத்தையும் தவிர்க்க முடியாமல் போரில் இழுத்து விட்டது.
பெரும் எண்ணிக்கையிலான துருப்புக்காவிக் கப்பல்களும், ஆயுதக்கப்பல்களும் சமுத்திரங்களைக் கடந்து சண்டையிடச் சென்றதால், ஆஸ்ரேலியா, கனடா முதல் இந்தியா வரை அனைத்து நாடுகளில் இருந்தும் படையினர் சண்டையில் குதிக்கச் செய்யப்பட்டனர்.
உதாரணமாக பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் வட ஆப்பிரிக்காவிலும், இத்தாலியின் மீதான நேச நாடுகளின் படையெடுப்பிலும் சண்டையிட்டார்கள்.
போர் வீரர்களின் சமாதிகள்
ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இரண்டு பிராந்தியச் சண்டைகளே இந்த இரண்டாம் உலகப்போர் ஆரம்பமாக காரணம் என்கிறார் மிகப் பிரபலமான பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளரான, சேர் மைக்கல் ஹொவார்ட். அதில் ஒன்று சீனாவின் மீதான ஜப்பானிய விஸ்தரிப்பு. அடுத்தது 1939 ஆண்டு ஜேர்மனி, போலந்தை தாக்கிய நடவடிக்கை. அது ஐரோப்பாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான மோதல்களுக்கு மீண்டும் வழி செய்தது.
ஜேர்மனியின் சோவியத் ஒன்றியத்தின் மீதான தாக்குதலாலும், பேர்ள் காபரில் இருந்த அமெரிக்க கடற்படை மற்றும் தென்கிழக்காசியாவில் இருந்த ஐரோப்பிய அதிகார மையங்ககள் ஆகியவற்றின் மீதான ஜப்பானிய தாக்குதலாலும், 1941 இல் இந்த போர் உலக மட்டத்துக்கு விரிவாக்கப்பட்டது.
சோவியத்தில் ஏற்பட்ட அழிவு
இந்த போரின் விளைவாக ஐரோப்பிய பிளவுகள் மேலும் ஆழமாகியதுடன், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவை வல்லரசுகளாகவும் உருவெடுத்தன.
ஆசியாவின் ஆட்சிகளிலும் இது பல மாற்றங்களுக்கு காரணமாகியது. அதுமாத்திரமல்ல, ஐரோப்பிய காலனித்துவ நாடுகளில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியையும், வறுமையையும், ஏற்படுத்தியதுடன், அவை காலனித்துவ ஆட்சியில் இருந்து மீளவும் வழி அது செய்தது.
Read more...